நாட்டு மக்களை காப்பாற்றும் நோக்கத்துடன்தான் ஆப்கனை விட்டு வெளியேறினேன்: முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி

’60 லட்சம் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் ஆப்கனை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தேன்’ என, முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

ஆப்கனின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:காபூலைவிட்டுச் சென்றது எனது வாழ்நாளில் எடுத்த மிகவும் கடினமான முடிவாகும். நாட்டின் 60 லட்சம் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் இந்த முடிவை எடுத்தேன். நாட்டைவிட்டு வெளியேறியதற்காக என் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நாட்டிலிருந்து எந்தவித பணத்தையும் திருடிச் செல்லவில்லை. நானும், எனது மனைவியும் எங்களின் சொந்த பணத்தையே பயன்படுத்தி வருகிறோம். எனது சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன். இதை நிரூபிக்க ஐ.நா., தலைமையிலான நிதி புலனாய்வுக் குழு அல்லது எந்தவித குழுவின் ஆய்வுக்கும் அனுமதிக்கத் தயார்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அஷ்ரப் கனிக்கு அமெரிக்கா உதவவில்லை. அவருடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது, தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியது மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தினோம்’ என்றார்