
நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது ஆண்டு சுந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளதால், அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் நாளை காலை 4 மணி முதல் 10 மணி வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே செங்கோட்டையைச் சுற்றி 5 ஆயிரம் பாதுகாப்புப் படையினரும், ட்ரோன் அழிப்பு சாதனமும், 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் கண்காணிப்பில் உள்ளன.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டையின் முன்பக்கத்தில் முதல் முறையாக காலி ‘கன்டெய்னர்’ பெட்டிகளை வைத்து பாதுகாப்பு தடுப்புச் சுவரை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடி உரையாற்றும்போது யாரும் காண முடியாதபடியும், உள்ளே யாரும் நுழையாதபடியும் இந்த ‘கன்டெய்னர்’ தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதமர் மோடி இன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- பிரிவினையால் ஏற்பட்ட வலிகளை ஒருபோதும் மறக்க இயலாது. லட்சக்கணக்கான நமது சகோதர, சகோதரிகள் இடம்பெயர்ந்ததுடன், பொறுப்பற்ற வெறுப்பு மற்றும் வன்முறையால் ஏராளமானோர் தங்களது உயிர்களை இழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.
சமூகப் பிரிவுகள், ஒற்றுமையின்மை ஆகியவற்றின் நஞ்சை நீக்கி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் தேவையை பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினம் நமக்கு தொடர்ந்து நினைவூட்டட்டும் என பதிவிட்டுள்ளார்.