
நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குஜராத்தில் முதலீட்டாளர் மாநாட்டைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- சுதந்திரத்தின் 75வது ஆண்டில் நுழைய போகிறோம், அடுத்த 25 ஆண்டுகள் நம் நாட்டுக்கு மிக முதன்மையானவை. இந்தக் காலத்தில் வேலை முறை, அன்றாட வாழ்க்கை, தொழில் வணிகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். தொழில்நுட்பம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் அந்த நேரத்தில் சுற்றுச்சூழல், நிலம், வளங்கள் ஆகியவற்றைக் காப்பதும் முதன்மையானது. தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றை எதிர்காலத்தில் செய்ய முடியும் என்றாலும் இயற்கை வளங்களைப் பூமித்தாயிடம் இருந்து மட்டுமே பெற முடியும்.
புதிய வளங்களை ஆழ்கடல் தேடல் மூலம் கண்டறிய இந்தியா முயன்று வருகிறது. நீடித்த வளர்ச்சிக்கான முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்களின் நலன் கருதிப் பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறினார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் இத்தடையானது 2022ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும், பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை பயன்பாட்டுக்கு 2022, ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 75 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டியது வருகிற செப்டம்பர் 30ம் தேதி முதல் கட்டாயம் எனவும், பிளாஸ்டிக் பைகளின் தடிமனுக்கான அளவு 120 மைக்ரானாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிளாஸ்டிக் பைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஏற்கெனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.