நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் இபிஎஸ்

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மதுரையில் நடைபெற்ற பென்விழா எழுச்சி மாநாட்டின், மாநாட்டுக் குழுவினரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தலை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், அதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், ஒற்றைத் தலைமை பிரச்சினைக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வந்துவிட்டதால், இந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுரை மாநாட்டுக்குப் பின்னர், தமிழகத்தில் அதிமுக எழுச்சி பெற்றுள்ளதாகவும், தற்போது அதிமுக ஒரே தலைமையின் கீழ் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் உடன் சட்டமன்றத் தேர்தலும் தமிழகத்தில் வருவதற்கான மேகங்கள்தான் கூடியிருக்கிறது. அப்படி தேர்தல் வரும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் நீர்த்துப்போகக்கூடாது என்பதற்காக அத்திட்டத்துக்கு மூடுவிழா நடத்தும் முயற்சி நடந்து வருகிறது. மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் காணாமல் போய்விட்டது. அதேபோல், தாலிக்கு தங்கம் அந்த திட்டத்தையும் செயல்படுத்துவது இல்லை” என்று குற்றம்சாட்டினார்.