
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
கடந்த இரண்டு தினங்கள் நாகை துறைமுகத்தில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. 14 ஊழியர்களை கொண்டு150 பயணிகளுடன் கொண்ட கப்பலின் கேப்டன் கொச்சின் பகுதியை சேர்ந்த 50 வயதான பிஜு பி.ஜார்ஜ். 25 கோடி ரூபாய் செலவில் சுமார் ஒரு வருடம் கொச்சினில் தயாரிக்கப்பட்ட கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது திறன் கொண்டது. சுற்றுலா பயணிகள் பயணிக்கும் செரியா பாணி சொகுசு கப்பலில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுபோக குளுகுளு ஏசிவசதியுடன் கட்டமைக்கப்பட்டு உள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், ஆபத்துகாலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
இந்த சூழலில் நாகை-இலங்கை இடையே 12ஆம் தேதி தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் நாகப்பட்டினம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே நாளை காலை பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது . பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. தொடக்க நாளை ஒட்டி நாளை ஒருநாள் மட்டும் கட்டணம் ரூ.3000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 35 பயணிகள் இலங்கை செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.