“நம்ம ஊரு, நம்ம குப்பை” என்று பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5500 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்தத் திடக்கழிவுகள் பிரிக்கப்பட்டு பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது. பெருங்குடி குப்பைக் கிடங்கில் தற்போது உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் (Bio Mining) குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சாலையில் பழைய தார்கலவை நிலையம் அமைந்துள்ள இடத்தில் தனியார் பங்களிப்புடன் 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஈரக்கழிவுகளிலிருந்து உயிரி எரிவாயு (Bio CNG) தயாரிக்கும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “சென்னையில் தினசரி சராசரியாக 5000 டன் குப்பைகள் வருகிறது. இவைகள் முதற்கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட சிஎன்ஜி கேஸ் ஆலை மற்றும் மாதவரத்தில் இயற்கை எரிவாயு ஆலை மூலம் உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
குடியிருப்புகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வெளியேற்றப்படும் திடக்கழிவுகள் நேரடியாக சேகரிக்கப்பட்டு சேத்துப்பட்டு ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2500 மெட்ரிக் டன் தான் குப்பை இருந்தது. தற்போது 5000 மெட்ரிக் டன் குப்பைகள் தினந்தோறும் வருகிறது. இவை அனைத்தையும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் கொட்டக்கூடிய நிலைமை இருந்தது வருகிறது. கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பைகளை படிப்படியாக எடுத்து அவற்றை முற்றிலும் பசுமை பூங்காவாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நம்ம ஊரு, நம்ம குப்பை என்று பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கட்டிட கழிவுகளை ஒபந்ததாரர்கள் சாலையில் கொட்டினால் அவர்களுடைய இயந்திரம் மற்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர்கள் கூறினார்.