நடிகை மீரா மிதுன் மீது போலீசில் புகார்

நடிகை மீரா மிதுனை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை மாநகர காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை மீரா மிதுன். இவர் சமீபத்தில் பட்டியலின சினிமா இயக்குநர்கள் குறித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோ பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் எழுந்து வருகின்றன

இந்நிலையில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மா.பா.மணி அமுதன் சார்பில் மீரா மிதுனை கைதுசெய்யக் கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், நடிகை மீரா மீதுனின் வீடியோவால் கோடிக்கணக்கான பட்டியலின மக்கள் வேதனை அடைந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோ சமூக பதட்டத்தை உண்டாக்கும் விதமாக உள்ளதால் மீரா மிதுன் மற்றும் அவரது காதலர் அபிஷேக் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.