வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைக்கு நாளை சென்னை ஐகோர்டில் தீர்ப்பு வழக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து ரூ.30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.