நகைக்கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவி கைது

திருவாரூர் கடைவீதியில் நகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் கிரண்குமார்(42) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு நகை வாங்குவதுபோல் பர்தா அணிந்து 35 வயது பெண் ஒருவர் வந்தார்.

பின்னர் அவர், ஒரு பவுன் அளவில் செயின் வேண்டுமென கிரண்குமாரிடம் கேட்டார். இதனால் ஒரு பவுன் செயின்களை எடுத்து கிரண்குமார் காண்பித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கிரண்குமார் கண்களில் மிளகாய் பொடியை தூவினார். பின்னர் ஒரு பவுன் எடையுடைய 5 செயின்களை எடுத்துக்கொண்டு மர்ம நபர் தப்பியோடினார்.

இதனால் சத்தம் போட்டவாறே கடைக்கு வெளியே கிரண்குமார் ஓடிவந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பர்தா அணிந்திருந்த பெண் தப்பியோட முயன்றார். இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து திருவாரூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்த கவிதா(35) என்பதும், நகைகளை எடுத்துக்கொண்டு ஓடியது ஆட்டோ டிரைவரான அவரது கணவர் கணேசன்(40) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கணேசன், கவிதாவை கைது செய்தனர். மேலும் கணேசனிடமிருந்து 5 பவுன் நகைகளை மீட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைத்தெரு பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.