நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

மப்பேடு ஊராட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.155 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வையின்படி மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 400 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் மொத்த பரப்பளவு 400 சதுர அடி ஆகும். மழலை குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, குழந்தைகள் விளையாடுவதற்கான சிறுவர் பூங்கா, அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து கடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி பகுதி முழுவதும் தெரு விளக்கு வசதி அமைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற விண்ணப்பிக்கும் நபரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். நாட்டின் எந்தப் பகுதியிலும் சொந்தமாக கான்கிரீட் தளம் போட்ட வீடு இல்லாதவராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மப்பேடு ஊராட்சியில் 12 பிளாக்குகளுடன் 1,728 வீடுகள் கட்டும் பணி ரூ.155 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் மானியமும் வழங்கப்படுகிறது. இந்த 400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

மப்பேடு ஊராட்சியில் இந்த தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துவக்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. மேலும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு ஆண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் தெரிவித்தார்.