
நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது, 86 பெண்கள் உட்பட 122 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், சி.மாரிக்கண்ணு, வி.சி.மகாலிங்கம், க.ரெத்தினவேல், ஏ.முத்தையா, மிடறு முருகதாஸ், ஏ.முத்தையா, எம்.மாரிமுத்து, எஸ்.யாசிந்த், என்.ராஜா, ஆர்.சி.ரெங்கசாமி, சி.ரெங்கசாமி எஸ்.செல்வம், எஸ்.முத்துமாரி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில், 86 பெண்கள் உட்பட 122 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகராட்சி, பேரூராட்சி நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைசெய்யும் தூய்மைப் பணியாளர், ஓட்டுநர்கள், குடிநீர் பணியாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும். இஎஸ்ஐ, பிஎப், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், 8 மணிநேர வேலை, வார விடுப்பு, பண்டிகைகால விடுப்பு உள்ளிட்ட அடிப்படைச் சட்டங்களை அமுல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தின் போது முழக்கங்களாக எழுப்பட்டன.