தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு – 15 பேர் உயிரிழந்தனர்

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

பாக்லான் மாகாணம் போல்-இ-கோம்ரியில் உள்ள தக்கியகானா இமாம் ஜமாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்ததால் மக்கள் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீப காலங்களில் இது ஆப்கானிஸ்தானை உலுக்கிய மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம். 2021-ல் தலிபான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கொடுமைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

ஏராளமான கட்டுப்பாடுகளுடன் இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்களும் தொடர்வதால் ஆப்கானிஸ்தான் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.