தொடரும் பலி ; ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியான பிறகு சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 73 நாட்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் தாமதம் செய்வது நியாயம் அல்ல!

ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!.” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + = 17