தொடரும் நிலவெடிப்பு காரணமாக உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பகுதியாக அறிவிப்பு

ஜோஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற்படும் பகுதி என அறிவிக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து சமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்சு குரானா இன்று கூறுகையில், “ஜோஷிமத் பகுதி பேரிடர் ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஜல்சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட மத்திய அரசின் இரண்டு குழுக்கள் இங்கு வர இருக்கிறது. ஜோஷிமத், அதன் சுற்றுப்புற பகுதிகளில் கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.தேவையானவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. தேவையான பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது” என்று கூறினார்.

இதற்கிடையில், ஜோஷிமத் நகரத்தில் 603 கட்டிடங்களில் தொடந்து வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும், மொத்தம் 68 குடும்பத்தினர் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கையில், “பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படி, மறுஉத்தரவு வரும் வரை, ஹோட்டல் மவுண்ட் வியூ, மலாரி இன் ஆகிய இரண்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுளன. ஜோஷிமத் பகுதியில் தற்போது 229 அறைகள் மட்டுமே தற்காலிகமாக தங்குவதற்கு தகுந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 1271 பேர் தங்க முடியும்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 33, 34-ன் படி, உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, தேசிய அனல் மின் நிறுவனத்தின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், எல்லை சாலை அமைப்பால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஹோ ஹரே ஹெலாங் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும், ஜோஷிமத் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப்பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித நகரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கான காரணங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. தேசிய அறிவியல் மையத்தின் (ஐஎன்எஸ்ஏ) ஓய்வு பெற்ற விஞ்ஞானி டிஎம் பானர்ஜி, “நீர்மின் திட்டப்பணிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள், சுரங்க கட்டுமானங்களுமே இந்த சிக்கலுக்கான காரணங்கள். ஜோஷிமத் – ல் உள்ள பாறைகள் கேம்பிரியன் காலத்திற்கு முந்தையவை. அந்த இடம் நில அதிர்வு பகுதி 4-ஐ சேர்ந்தது. இவைகள் தவிர 3,4 மாடிகள் கொண்ட பெரிய வீடுகள் இந்த பகுதிகளில் கட்டப்படக்கூடாது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 66 = 68