தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வரிடம் நாளை அறிக்கை தாக்கல் :அமைச்சர் அன்பில் மகேஷ்!!!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் உடற்பயிற்சி மையத்தை அவர் திறந்து வைத்தார்.பின்னர் பேட்டி அளித்த அவர், பாடங்கள் மட்டுமல்லாமல் உடற்பயிற்சிக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ‘பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அனைவரும் ஒன்று சேர்ந்து நீட்தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு,’என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.9 ,10,11,12ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஒரு வகுப்பறைக்கு 20 பேர் வீதம்  அமரவைக்கப்படும் என்றும், இதற்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையில் உள்ள காலி வகுப்பறைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டால் சுழற்சி முறைக்கு மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.