தேவாரச் செப்பேடுகளை கோவிலிலேயே வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் கடந்த 16-ந்தேதி அன்று, பூமிக்கு அடியில் இருந்து 23 செப்புத் திருமேனிகள், 412 செப்பேடு கள் மற்றும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இந்த வரலாற்று ஆதாரமான செப்பேடுகள், சீர்காழி சட்டநாதர் கோவிலிலேயே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு ஓர் சிறப்பு அறை கட்டப்பட்டு அதில் இந்த செப்பேடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட வேண்டும். குடமுழுக்கிற்குப் பின்னர் கோவிலிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தருமையாதீனத்தின் குருமகா சந்நிதானம் ஏற்கனவே அறிவித்துள்ளார். சீர்காழி சட்டநாதர் கோவிலில் அருங்காட்சியகம் அமைத்திட, மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம் தமிழக அரசு ஆதீனத்திற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.