தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோவில் திருவிழாக்களின் போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் திருவிழாக்களை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜராகி அட்வகேட் ஜெனரல், தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து கடந்த 2019-ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். விழாக்குழு சார்பில் ஆஜரான வக்கீல், 2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரிவித்தார். இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

40 + = 44