தேர்தல்களில் போட்டியிடாமல் செயல்படும் 2,300க்கும் அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து : தேர்தல் ஆணையம்

தேர்தல்களில் போட்டியிடாமல் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக பெயரளவில் செயல்படும் 2,300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 8 தேசிய கட்சிகள், 53 மாநில கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 2,638 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர்.இவற்றில் 400க்கும் குறைவான கட்சிகள் மட்டுமே தேர்தல் போட்டிகளில் இடம்பெற்றன.

அதிலும் 200 கட்சிகள் தான் தீவிர அரசியலில் ஈடுபட்டனர்.மீதமுள்ள கட்சிகள் வெறும் பெயரளவில் ஆவணங்களில் மட்டுமே உள்ளன. தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரப்படி 2010ம் ஆண்டு 1,112 கட்சிகள் பதிவு செய்து இருந்த நிலையில், தற்போது அது 2, 700 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு தேர்தல்களில் போட்டியிடாத லெட்டர் பேடுகளில் மட்டுமே செயல்பட்ட 400க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை கடந்த 1999ம் ஆண்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களோடு ஒத்துப்போகும் வகையில் தொடங்கப்பட்டுள்ள கட்சிகளால் மீண்டும் குழப்பமே நீடித்து வந்த நிலையில்,மேலும் சாட்டையை சுழற்ற தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவோடு தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட வேண்டிய அரசியல் கட்சிகளின் பட்டியலையும் தேர்தல் ஆணையம் அனுப்பிவைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலான கட்சிகள் வருமான வரிச் சலுகை பெறவும் பண மோசடியில் ஈடுபட மட்டுமே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யுமாறு இந்த  கட்சிகளுக்கு பல முறை கடிதம் எழுதியும் அதற்கு பதில் வரவில்லை. இந்த நிலையில் கட்சி என்ற பெயரில் வரி மோசடியுடன் பண மோசடியிலும் அந்த கட்சிகள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், 2,300க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.