புதுக்கோட்டை அருகில் உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர்.மேலப்பட்டி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 9 ஆண்டுகள் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இக்கல்வியாண்டில் ரித்திகாஸ்ரீ, மாதேஸ்வரி, சத்யா, ரித்திகா,பிரதாப், உதயநிதி, கேசவன், யக்தீஷ் என 8 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். 2013 -2014ஆம் கல்வியாண்டில் இருந்து தொடர்ந்து 9 வருடங்களாக மேலப்பட்டி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். மேலும் சென்ற கல்வி ஆண்டிலும் ,இக்கல்வி ஆண்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து முதலிடத்தை இப்பள்ளி பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் சுமார் 197 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தேர்வு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வீதம் அவர்கள் +2 முடிக்கும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
இந்த தேர்வு எழுதுவதன் மூலம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடைபெறும் கிராமப்புற மாணவர்களுக்கான திறனறித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடைபெறும் என்.டி.எஸ்.சி தேர்விலும் வெற்றிபெற்று உதவித்தொகை பெற இது வழிகாட்டியாக அமையும். இத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் அரசு பணியாளர் தேர்வு மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு போன்ற பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்வு எழுதுவதற்கும், அரசு பணிகளை பெறுவதற்கும் இது வழிகாட்டியாக அமையும். திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மேலப்பட்டி அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலர் பேராசிரியர்.விஸ்வநாதன் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து , புத்தகங்கள் வழங்கி வாழ்த்திப் பேசினார்கள் மேலும் கல்வி அலுவலர்கள், இப்பள்ளியின் தலைமையாசிரியை சீத்தாலெட்சுமி, ஆசிரியர்கள் மகேஸ்வரன் , சரவணன், ஜெயந்தி, ஜெயலெட்சுமி, இந்திரா மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், கல்வியாளர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.