தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்வதற்கான தேர்வில் பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்வதற்கான தேர்வில் பங்கேற்க பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல் படை ஆகிய முப்படைகளுக்குமான பயிற்சிகளை வழங்கும் அமைப்பு, தேசிய பாதுகாப்பு அகாடமி. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதில் பயிற்சி பெற முடியும் என்பது விதிமுறையாகும். இதில் பெண்களையும் சேர்த்து பயிற்சியளிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்காமல் இருப்பதற்கு பாலின பாகுபாடு மட்டும் தான் காரணமே தவிர வேறொன்றுமில்லை என்று அவர் வாதிட்டார்.

 இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நுழைவுத்தேர்வில் பெண்களையும் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. இதற்கான தேர்வினை நடத்தும் அமைப்பான யு.பி.எஸ்.சி. இதுகுறித்து விரிவான அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பினை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் இன்றைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.