தேசிய பத்திரிகையாளர்கள் தினம் : “சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்” – முதல்வர் வாழ்த்து

தேசியப் பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள் தான் தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் பேணிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகையாளர் நாள் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் போற்றப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில், “உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.