தெப்பக்காடு முகாமில் யானை உயிரிழப்பு – வன உயிரின ஆர்வலர்கள் சோகம்

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற வளர்ப்பு யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.

1998-ம் ஆண்டில் கேரளாவில் மக்னா யானை ஒன்று அடுத்தடுத்து 23 பேரை மிதித்துக்கொன்றது. இதையடுத்து கேரள வனத்துறை சார்பில் மக்னா யானையை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், யானை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டத்திற்குள் நுழைந்தது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை உத்தரவிட்டதை தொடர்ந்து 3 கும்கி யானைகள் உதவியுடன் வாச்சுக்கொல்லி என்ற இடத்தில் வைத்து மயக்கு ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட மக்னா யானையின் உடலில், குண்டு காயங்கள் உட்பட பல்வேறு காயங்கள் இருந்தன. வன கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி யானைக்கு தொடர் சிகிச்சைகள் அளித்தார்.

இதனால் மிகவும் மூர்க்கமாக இருந்த யானை சாதுவாக மாறியது. இதையடுத்து மருத்துவரின் நினைவாக அந்த யானைக்கு மூர்த்தி என பெயரிடப்பட்டது. கும்கி பயிற்சி அளிக்கப்பட்ட மூர்த்தி யானை, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தது. வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு இந்த யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக யானைக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. யானைக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் கோளாறுகள் இருந்ததால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மூர்த்தி உயிரிழந்தது. இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. வளர்ப்பு யானை உயிரிழந்துள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.