தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; டிராவிஸ் ஹெட் காயம்…உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா ?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் டிராவிஸ் ஹெட்டின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.

ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து 417 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 164 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட், ஜெரால்ட் கோட்ஸியின் பந்து வீச்சில் இடது கையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார். அதன் பின்னர் டிராவிஸ் ஹெட்டுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிப்படுத்தினார்.

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் டிராவிஸ் ஹெட் காயம் அடைந்துள்ளதால் அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை டிராவிஸ் ஹெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை என்றால் அவருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.