தென்காசி மாவட்டத்தில் மழலையின் மனுவுக்கு உடனடியாக பதில் தந்த முதல்வர்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

தோண்ட தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல தொடர்ந்து படிக்க படிக்க அறிவு பெருகிக்கொண்டே இருக்கும் என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் வகையில் பல சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். புதிய கல்வி உபகரணங்கள் எளிய கற்றல் முறைகள் பள்ளி மேலாண்மை குழு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என கல்வியின் முக்கியத்தை கருத்தில் கொண்டு பல சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்,

தமிழக முதல்வர் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:-

தென்காசி மாவட்டத்தில் வினைதீர்த்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்னும் குழந்தை சமீபத்தில் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார் அந்த கடிதத்தில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என்று கேட்டிருந்தார், பாருங்கள் ஒரு குழந்தை எழுதி இருக்கிறது அந்த கடிதத்தை படித்ததும் எனக்கு பெருமையாக இருந்தது எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்த கடிதம் எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன், குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்த கூட்டத்தில் இப்போது நான் அறிவிக்கிறேன் அதற்கு முதற்கட்டமாக ரூபாய் 35 லட்சத்தி 50 ஆயிரம் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வளவு சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்கு கடிதம் எழுதிய அந்தக் குழந்தை ஆராதனா அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று மீண்டும் அந்த சிறுமியை அந்த குழந்தையை நான் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

ஆராதனா

தனது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சருக்கு சிறுமி ஆராதனா எழுதிய நன்றி கடிதத்தில் தெரிவித்ததாவது நான் அனுப்புன மனுவை ஏற்றுக் கொண்டு எனது பள்ளிக்குநிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இதே பள்ளியில் படித்து பெரிய ஆளா ஆகணும்னு சொன்னீங்க ஐயா நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும் ஐயா எங்க அப்பா, அம்மா, ஊர் மக்கள் என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க ஐயா உங்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா என கடிதத்தில் தெரிவித்தார். தொடர்ந்து மாணவி ஆராதனாவின் கனவை நினைவாக்கும் வண்ணம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பம்பட்டி கிராம ஊராட்சி வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 13 .1. 2023 அன்று இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் மாணவி ஆராதனாவுடன் இணைந்து அடிக்கல் நாட்டினார்.

மாணவி ஆராதனாவின் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஏற்று பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனதிலும் புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தொகுப்பு: இரா இளவரசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

ராமசுப்பிரமணியன் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 58 = 59