
தென்காசி நகராட்சி 33 வார்டுகளை கொண்ட பகுதியாகும். இங்கு 21 வது வார்டு சொர்ணபுரம் மேட்டு தெருவில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாததால் அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் இணைப்பு மற்றும் பகிர்மான குழாய் அமைத்து தர கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் 21 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அபூபக்கர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தென்காசி நகர் மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் மற்றும் நகர் மன்ற ஆணையாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
நகர் மன்றத் தலைவர் அப்பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார், மூன்று மாத காலத்திற்குள் அந்த பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, இதில் வார்டு கவுன்சிலர் ராசப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.