தென்காசி அருகே மின் பொறியாளருக்கு ரூபாய் 17,000 அபதாரம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

தென்காசி அருகே உள்ள பொட்டல்புதூரில் மின்கட்டணம் கட்டிய பிறகும் மின் இணைப்பை துண்டித்த மின்பொறியாளருக்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல் புதூரில் இரவண சமுத்திரத்தைச் சார்ந்த சங்கிலி பூதத்தான் என்பவர் 1992 முதல் பொட்டல்புதூர் மேல பஸ் ஸ்டாண்ட், மெயின் ரோட்டில் உள்ள வரிசை கட்டிடத்தில் உள்ள கடையில் கடந்த 30 வருடங்களாக ஜெராக்ஸ் மற்றும் சேவை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி உரிய மின் கட்டணம் ரூபாய் 317 /- ஐ தபால் நிலையம் மூலம் செலுத்தினார்.
ஆனால் மே மாதம் 9ம் தேதி ஆழ்வார்குறிச்சி மின்வாரியத்தில் இருந்து இளநிலை மின் பொறியாளர் ஒருவர் மேற்படி நபரின் கடைக்கு வந்து நீங்கள் உங்கள் கடைக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறினார். அதற்கு சங்கிலி பூதத்தான் 9 ம் தேதியே கட்டணம் செலுத்தி விட்டதாக அஞ்சலக அலுவலகம் மூலம் கட்டிய ரசீதை கட்டியதற்கு அடையாளமாக காண்பித்தார்.

ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாமல் மின்வாரிய பொறியாளர் மின் இணைப்பை துண்டித்து விட்டார், மீண்டும் பணம் கட்டினால் தான் கடைக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க முடியும் என்று அப்போது தெரிவித்தார்,இதனையடுத்து சங்கிலி பூதத்தான் வேறு வழியில்லாமல் மின்சாரம் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்ற நிர்பந்தத்தில் ஆழ்வார்குறிச்சி மின்சார வாரிய அலுவலகத்தில் மீண்டும் ரூ 367/- மின் கட்டணத்தை அபராதத்துடன் சேர்த்து செலுத்தினார். அதன் பின்னரே அவரது கடைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதனால் மன உளைச்சல் அடைந்த சங்கிலி பூதத்தான் ஆழ்வார் குறிச்சியைச் சார்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உறுப்பினர் கிளாட்ஸ்டன் பிளசட்தாகூர் வழக்கில் விசாரணை நடத்தினார். முடிவில் ஆழ்வார்குறிச்சி மின்சார வாரிய இளநிலை பொறியாளருக்கு ரூபாய் 17,000 அபதாரம் விதித்து சங்கிலி பூதத்தானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபரான சங்கிலி பூதத்தான் அந்தப் பகுதியில் சிறந்த சேவை மனப்பான்மையோடு பல்வேறு நல்ல செயல்களும், பொது நிகழ்ச்சிகளும் செய்யக் கூடியவர் பொது நலத்தோடு செயல்படும் சமூக ஆர்வலர் சங்கிலி பூதத்தான் தற்போது நுகர்வோருக்கு கிடைக்க வேண்டிய உரிமையை சட்ட மூலம் அணுகி வெற்றி பெற்றுள்ளார்.
இதையறிந்த அந்த பகுதியை சார்ந்த வியாபாரிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், சமூக ஆர்வலர் சங்கிலி பூதத்தானுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.