தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென்காசி மாவட்டம் இயற்கை வளம் மிகுந்தது. தென்காசி புறவழிச்சாலை பணிக்கு ரூ.42 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தென்காசி நகர பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் நகர பகுதிக்குள் வருவதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட்த்தில் கனிம வளங்கள் அதிக அளவில் ஏற்றிச் செல்வது குறித்து புகார்கள் வந்ததை அடுத்து 3 செக்போஸ்ட்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குற்றாலத்தில் சீசன் காலங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு சுற்றுலாத்துறை மூலம் நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலத்தை குப்பை இல்லா குற்றாலமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மாவட்ட வன அலுவலர் அலுவலகம் தென்காசியில் செயல்படும்.
தென்காசியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிட பணிக்கு வருவாய் துறை அமைச்சரிடம் சிறப்பு அனுமதி பெறப்படும்.
தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தனியார் ஒருவர் 18 ஏக்கர் நிலத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.
.மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தென்காசியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட துவங்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் கூறினார்.