
தூத்துக்குடி ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நீதிபதிகள் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றுகூறி தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் எனக்கோரி போராடிய மக்கள் மீது கடந்த 2018-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடந்திருந்தது. இது தொடர்பாக விசாரித்த மனித உரிமை ஆணையம், வழக்கை முடித்துவைத்திருந்தது. அதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் ‘விசாரணையை மனித உரிமை ஆணையம் மீண்டும் தொடங்க வேண்டும். முறையாக விசாரணை நடக்கிறதா என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமை ஆணையம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மனுதாரருக்கு நகலாய்வு வழங்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நகலாய்வை இணைய வழியில் பரப்பக்கூடாது என்றும் அவர்கள் அறிவுரை தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தபோது, ‘பலியானவர்களின் குடும்பங்களுக்கும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்திற்காக இப்படியான துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளை அரசு துறைகள் நடத்தக்கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’ என்றனர். பின்னர் இவ்வழக்கை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.