தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த 22-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி, சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (45). வழக்கறிஞரான இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இவர் கடந்த 22-ந் தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்றபோது மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேஷின் அண்ணன் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் முத்துக்குமாரின் தம்பி சிவகுமார் கடந்த 2019-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் சிவகுமார் கொலை வழக்கில் கைதான ராஜேஷ் கோவை சிறையில் இருப்பதும், அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு வழக்கறிஞர் முத்துக்குமார் இடையூறாக இருந்ததும், இதனால் ராஜேஷின் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் முத்துக்குமாரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கு தொடர்பாக வேல்முருகன் (25), ராஜரத்தினம் (25), இலங்கேசுவரன் (30), முத்துராஜ், ரமேஷ் ஆகிய 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களில் வேல்ருகன், ராஜரத்தினம், இலங்கேசுவரன் ஆகிய 3 பேரையும் சிப்காட் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் தட்டப்பாறை அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் குற்றவாளியை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு ஜெயப்பிரகாஷ் தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் குற்றவாளி ஜெயபிரகாஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயபிரகாஷ் காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.