துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

துருக்கியின் வட மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியின் வடமேற்குப் பகுதியில் டவுசி மாகாணத்தில் உள்ள கோல்கயா என்ற நகரத்தை மையமாகக் கொண்டு உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.08 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கி உள்ளன. பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு அவசர, அவசரமாக வெளியேறி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சுலேமான் சோயிலு தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தை அடுத்து டவுசி மாகாண பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கத்தை அடுத்து 35 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதும் பதிவாகி உள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மேற்கு வடமேற்கு திசையில் 186 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் அங்காராவிலும், 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஸ்தான்புல் நகரிலும் எதிரொலித்துள்ளது. அங்குள்ள தொலைக்காட்சி நிலையங்களில் கட்டடம் ஆடுவது வீடியோவாக பதிவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 + = 34