‘தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது’: பிரதமர் மோடி அறைகூவல்

தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது. அதேபோல், தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும் 18ம் தேதி,  நாளை 19ம் தேதியும் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.

மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் கண்டனத்துக்கு உரியது தான். அதேபோல் தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை அவசியமானது.

இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை வெகு காலத்திற்கு முன்னர் சந்தித்துவிட்டது. இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் தீவிரவாதம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்துக்கு இழந்துள்ளோம். ஆனாலும் நாம் துணிச்சலுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியுள்ளோம்.

ஒரே ஒரு தாக்குதல் என்றாலும் அது தீவிரவாதம் தான். ஒரே ஒரு உயிர்ப்பலி என்றாலும் அது பெரிய இழப்பு தான். அதனால் தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது.

தீவிரவாதத்தின் நீண்ட கால தாக்கம் என்பது ஏழை மக்கள் மீதே பெருமளவில் பிரதிபலிக்கிறது. உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கிறது. எப்போதும் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில் தொழில் முதலீடு செய்ய யாரும் விரும்புவதில்லை. அதனால் அந்தப் பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் வேரைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =