தி.மு.க., ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம்: எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

“தி.மு.க., ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது,” என்று, ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன், முனுசாமி உடனிருந்தனர்.

ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஆளுநரிடம் புகாரளித்தேன். தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து இருந்தால் கோவை கார் வெடிப்பை தடுத்து இருக்கலாம். கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை.

பொம்மை முதல்வராக ஸ்டாலினும், திறமையற்ற அரசாக தமிழக அரசும் இருக்கிறது. நிர்வாக திறமையின்மை காரணமாக போதைப்பொருளை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் நிலவுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை இந்த அரசு பறித்துவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையில் தி.மு.க., ஆட்சியில் தட்டுப்பாடு உள்ளது. நம்ம ஊரு சூப்பரு என்ற விளம்பர பேனர் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.350 செலவாகும் பேனருக்கு ரூ.7,906 விலை நிர்ணயம் செய்து கணக்கு காட்டுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் டெண்டரே விடாமல் சட்டவிரோதமாக மதுபார்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபான கொள்முதலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. புகார்களை படித்துப்பார்த்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

42 − = 33