தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பழைய பாலத்தின் ஒரு பகுதியை மட்டும் இடித்து புதிய பாலத்துடன் இணைக்கும், மேம்பால கட்டுமான பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க பல்வேறு அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோயில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இந்த பாலம் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தின் உள்ள சாய்தளத்தை தகர்த்து புதிய பாலத்துடன் இணைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தற்போது உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீ நீளம் கொண்டது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக அமைக்கப்படவுள்ள மேம்பாலத்துடன் இணைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளது.
புதிய மேம்பாலம் 1200 மீ நீளத்தில், 8.40 மீ அகலத்தில் ரூ.131 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான வரைபடம் தயார் செய்யும் பணி நிறைவுபெற்றுள்ளது. இந்த வரைபடம் சென்னை ஐஐடி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் பழைய மேம்பாலங்கள் இணைந்தால் சென்னையில் உள்ள மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றாக இந்த மேம்பாலம் இருக்கும்.