திருவொற்றியூரில் மேம்பாலம் கட்டும் பணி மந்தம் சாலைகள் மோசம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்

சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலிவரை செல்லக்கூடிய இணைப்பு சாலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. அவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் வகையில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

அவ்வழியாக இயங்கி வந்த சென்னை மாநகர பேருந்துகளான 44 மற்றும் 56D போன்ற வழித்தடங்கள் மாற்றப்பட்டு பக்கிங்காம் கால்வாய், கார்கில் நகர்,  மணலி விரைவு சாலை வழியாக செல்வதால் பள்ளி மாணவ, மாணவியர், அப்பகுதி மக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பகுதி குழு உறுப்பினர் அருமைராஜ் தலைமையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில், நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். திருவொற்றியூர் போலீஸ் உதவி ஆணையர் முகமது நாசர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவொற்றியூர் போலீசார், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில்  நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் லதா, மேம்பால பணிகள் முழுவதும் மே அல்லது ஜூன் மாதத்தில் முடித்து தருவதாகவும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் சரி செய்யப்பட்டு தற்காலிகமாக பயன்படுத்தக்கூடிய வகையில் அமைத்து தரப்படும என்று வாக்குறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 8 = 11