திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பைபாஸில் இன்று காலை கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். கர்நாடக பதிவெண் கொண்ட அந்த காரில் பயணித்த 2 சிறுவர்கள், 1 பெண் , 4 ஆண்கள் என அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.

அந்தனூர் புறவழி சாலையில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்த லாரி நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

விபத்து குறித்து அறிந்தவுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட உடல்கள் அந்தனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாலும், லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாலும் விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. தற்போது லாரி ஓட்டுனரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கார் கர்நாடக பதிவெண் கொண்டுள்ளதால் உயிரிழந்தோர் விவரங்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.