திருவண்ணாமலை அருகே முகப்பரு பிரச்னையால் உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவர்

திருவண்ணாமலை அருகே முகப்பரு பிரச்னையால் முகம் வீங்கி பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த நம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் சேவத்தான் – செல்லம்மாள் தம்பதியர். பழங்குடியினத்தை சேர்ந்த இவர்களுக்கு சுதா, அசோக், அஜித், சிவகாசி, சுஹாசினி என 5 பிள்ளைகள் உள்ளனர். இதில், மூன்றாவது பிள்ளையான சிவகாசி அங்குள்ள ஜமுனா மரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரசு விடுதியில் தங்கி படித்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதியன்று அப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தொலைபேசி மூலம் சிவகாசியின் தந்தை செவத்தானை தொடர்பு கொண்டு பேசியுளார். அப்போது, சிவகாசியின் முகம் வீங்கி உள்ளதாகவும் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, செவத்தான் தனது மகன் சிவகாசியை நம்பியந்தல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

நம்பியந்தல் அரசு மருத்துவமனையில் சிவகாசிக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் மாணவனின் உடல்நிலை மேலும் மோசமானதால் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, மாணவனின் பெற்றோர் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில், “தன் மகன் இறப்பிற்கு ஆசிரியை முகப்பரு ஊசியை வைத்து சுத்தம் செய்ததே காரணம். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1