திருமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்தை காண

சொர்க்க வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், எம்.எல்.சி.கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். இதையடுத்து 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6 மணிக்கு மேல் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பக்தர்களும் 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2000 பக்தர்களும் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் வழங்கி உள்ளது. தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் டிக்கெட் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை திருப்பதியில் உள்ள ராமா நாயுடு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள கவுண்டரில் அதிகாலை 2.45 மணிக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டது. அப்போது தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசாரால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் கீழே விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பக்தர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பக்தர்களை ஒழுங்குப்படுத்தி காயமடைந்த பக்தர்கள் மற்றும் போலீசாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. திருப்பதியில் நேற்று 53,101 பேர் தரிசனம் செய்தனர்.23,843 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =