திருமயம் அருகே சாலை போடுவதற்காக
3 மாதங்களாய் நடுரோட்டில் கொட்டிக் கிடக்கும் ஜல்லிக் கற்கள் :
வாகனங்கள் செல்ல முடியாமல் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

திருமயம் அருகே சாலைபோடுவதற்காக 3 மாதங்களாய் கொட்டிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் எவ்வித வாகனங்களும் செல்ல முடியாததால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

திருமயம் பெல் அருகில் உள்ள கன்னிப்பட்டியில் இருந்து சவேரியார்புரம் செல்லும் சாலை 3 கிமீ நீளத்திற்கு உள்ளது. இந்த சாலையை ஒட்டி கன்னிப்பட்டை, குருந்தம்பாறை, குளத்துப்பட்டி, சவேரியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தச் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலை வழியே இரண்டு நகரப் பேருந்துகளும் சென்று வந்தன. ஆனால்,இந்தச்சாலை பல ஆண்டுகளாய்ச் செப்பனிடப்படாமல் சாலையில் போடப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் அனைத்தும் வெளியில் வந்து குண்டும் குழியுமாகக் கிடந்தன. இதனால் வாகன் ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

கன்னிப்பட்டியில் இருந்து குளத்துப்பட்டிவரை நடுரோட்டில் கொட்டிக் கிடக்கும் ஜல்லிக் கற்கள்.

பின்னர் பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு இச்சாலையை செப்பனிட உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் டெண்டர் எடுத்தவர்கள் 3 மாதங்களுக்கு முன்னர் இச்சாலையை அமைப்பதற்காக கன்னிப்பட்டியிலிருந்து, குளத்துப்பட்டிவரை ஜல்லிக் கற்களை நடு ரோட்டில் கொட்டி வைத்துள்ளனர். 3 மாத காலம் ஆகியும் இன்னும் சாலை வேலை ஆரம்பிக்கப்படவில்லை. அத்துடன், ஜல்லிக் கற்கள் நடுரோட்டில் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடப்பதால் எந்த வாகனமும் அதில் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனைக் காரணம்காட்டி பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் நோயாளிகள், முதியவர்கள் ஆகியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான வாகன்ங்களும் செல்லமுடியாமல் இப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களும், பொதுமக்களும் 3 கிமீ தூரம் நடந்தே பிரதானச் சாலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. எனவே மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இச்சாலையை செப்பனிடும் பணியை உடனே ஆரம்பித்து முடித்துத் தர திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சட்டத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்த துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 19 = 20