திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்: ம.பி.,  அரசு அதிரடி சலுகை திட்டங்கள் அறிவிப்பு

விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில், அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. ஒவ்வொரு நாடும் ஜவுளித்தொழில்கள் மூலம் வேலை வாய்ப்பையும், பொருளாதார நிலையையும் உயர்த்திக்கொள்கின்றன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜவுளித்தொழில் பின்தங்கியுள்ளது. அங்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரபலமான தொழில் நகரங்களின் மீது பார்வை திரும்பியுள்ளது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் முக்கிய நகராக உள்ள திருப்பூரை வெளிமாநிலங்கள் பார்க்கின்றன. அதற்காகவே பின்னலாடை தொழில்துறையினர் தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

மத்தியபிரதேச மாநில அரசு பல்வேறு சலுகை அறிவிப்புகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், அரசு இயங்கி வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் நல்லுறவு காரணமாக தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும், புதிய தொழில்கள் உருவாக்கவும் விரிவான திட்டமிடலுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அம்மாநில வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் மணீஷ்காந்த் தலைமையிலான குழுவினர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய பிரதேச அரசு, அதிரடி சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனத்துக்கு ஒவ்வொரு தொழிலாளருக்கும் தலா, 5,000 ரூபாய் வீதம், 5 ஆண்டுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் தொழில் துவங்கும் நோக்கில், இயந்திரங்கள் வாங்கினால் முதலீட்டு மானியமாக 40 சதவீதம் வரை வழங்கப்பட உள்ளது. மீதியுள்ள முதலீட்டு கடனுக்கு 5 சதவீத வட்டி சலுகையும் அறிவித்துள்ளது. தொழிற்சாலை இயக்கத்துக்கு தேவையான மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும்.

மின் கட்டணத்தில், யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கட்டண சலுகை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதிரடி அறிவிப்புகளைத் தொடர்ந்து அம்மாநில அரசு பிரதிநிதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தொழில் முதலீட்டை ஈர்த்து வருகின்றனர். அந்தவகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களிலும் தொழில் துவங்க வருமாறு மத்திய பிரதேச அரசு பிரதிநிதிகள் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களிலும், பின்னலாடை தொழிலை துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய பிரதேச அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு நலன் கருதி அழைப்பு விடுத்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், “இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து, 20 ஆயிரம் கோடியாக ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும்,” என்று பியோ தலைவா் சக்திவேல் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =