திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஓராண்டிற்கு பிறகு தினசரி 2 ஆயிரம் பேருக்கு இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா 2ம் அலை தொடங்கிய பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கல்யாண உற்சவ சேவை டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தினசரி 20,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரக்கூடிய நிலையில், இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். முதற்கட்டமாக சித்தூர் மாவட்ட மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தினசரி 2 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வு அறையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் காலை 8 மணி முதல் வழங்கப்பட்டு வருகிறது. டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.