கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருநாவலூர் காலனி பகுதிகளில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத சந்தேகம் படும்படியான வகையில் சுற்றி திரிந்த ஒரு நபரை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அப்பகுதி பொது மக்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுற்றி திரிந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் சேலம் மாவட்டம், தலைவாசல், மெயின் ரோட்டில் வசித்து வரும் சக்திவேல் மகன் விக்னேஷ்(22) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை மேற்கொண்டதில் இவர் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் இவரை கைது செய்து, அவரிடம் இருந்த 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.