திருச்சி அருகே முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் திருட்டு!

மணப்பாறையில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இந்திரா நகரில் வசித்து வருபவர் சின்னச்சாமி. மருங்காபுரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர். இவரின் வீட்டின் முன்பகுதியில் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் எழுந்து பார்த்த போது, வீட்டின் முன்பு தாழ்வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மணப்பாறை பகுதி முழுவதும் தேடியும் கார் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இதே சின்னச்சாமியின் காரை டாடாசுமோ விக்டா காரை மர்மநபர்கள் எரிந்து விட்டுச் சென்றிருந்த சம்பவத்தில் இதுவரை அந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கார் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் மணப்பாறை, ராமலிங்கம் தெருவில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலைமதிப்புள்ள 2 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு வீட்டில் லேப்டாப் மற்றும் செல்போன், மற்றொரு வீட்டில் செல்போன் என அடுத்தடுத்த 4 இடங்களில் கொள்ளை போயிருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாள் இரவில் ஒரு சொகுசு கார், 2 இருசக்கர வாகனம், இரண்டு செல்போன், ஒரு லேப்டாப் என அடுத்தடுத்து திருடப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.