திருக்கடையூர் கோவிலில் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினருடன் உக்கிர ரத சாந்தி பூஜை, வழிபாடு

திருக்கடையூர் கோவிலில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இத்தலத்தில் மார்க்கண்டேயருக்காக சுவாமி, கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இச்சிறப்பு பெற்ற திருக்கடையூர் கோவிலுக்கு 60 வயது தொடங்கியதை முன்னிட்டு அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது மனைவி அனுராதா, மகள் ஜெயஹரனியுடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் 64 கலசங்கள் அமைக்கப்பட்டு, உக்கர ரத சாந்தி ஹோமம் மற்றும் பூஜைகள் செய்தார். தொடர்ந்து தினகரன் அவரது மனைவி அனுராதாவுக்கும் கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் தம்பதியர் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.

அதை அடுத்து தினகரன் குடும்பத்தினருடன் அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில் உதவியாளர் ஜனார்த்தனம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான 15 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

தொடர்ந்து தினகரன் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு குடும்பத்துடன் சென்று தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 4