திருஇந்தளூரில் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் கலெக்டர் லலிதா உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எம்பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர். தொடர்ந்து மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உணவு அருந்திவிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த எம்எல்ஏ. ராஜகுமார் உள்ளிட்டோர் தாமதமாக திருஇந்தளூர் பள்ளிக்கு வந்தனர். அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறு குழந்தைகள் பசியில் காக்க வைக்கப்பட்டனர். அவர்களது பசி தெரியாமல் இருக்க சிறு சிறு விளையாட்டுகள் ஆசிரியர்கள் விளையாடச் சொல்லி நேரத்தை போக்கினர்.
தொடர்ந்து 9: 45 நிமிடங்களுக்கு மிகவும் காலதாமதமாக உணவு பரிமாறப்பட்டது. இதனால் குழந்தைகள் பசியில் வாடினர் தொடர்ந்து பள்ளியும் தாமதமாக துவங்கப்பட்டது. இந்நிலையில் திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கி சிரமப்படுத்தியதாலும், காலை 9.45 மணியளவில் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்த திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு காரணமாக இருந்த மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் சீத்தாலட்சுமி ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 7 =