திமுக மற்றும் தோழமைக்கட்சியினர் வெற்றி பெறும் வகையில் கடினமாக உழைக்க வேண்டும் – முக.ஸ்டாலின் அறிவுறுத்தல்

9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக, உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் தோழமைக்கட்சியினர் வெற்றி பெறும் வகையில் கடினமாக உழைக்க வேண்டும் என முக.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஊரக, உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் முதல்ல்வர் முக.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் கூறியதாவது:- வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்போது கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களை மக்கள் மத்தியில் விளக்கி ஓட்டு கேட்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக மற்றும் தோழமைக்கட்சியினர் வெற்றி பெறும் வகையில் கடினமாக உழைக்க வேண்டும் என கூறினார்.