திண்டுக்கல் : தனது பெயரில் போலி பேஸ்புக் திறந்து அவதூறு பரப்புவதாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இளைஞர் புகார்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கே.புதூர் தெற்கு தெருவை சேர்ந்த நாகூர் மீரான் என்பவரது மகன் அப்சல் கான்(21). இவர் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, கடந்தாண்டு எனது புகைப்படத்துடன் கூடிய போலி பேஸ்புக் முகவரி தொடங்கப்பட்டுள்ளது. யாரென்று தெரியவில்லை. அதில் அவதூறாக கருத்துக்கள் பரப்பி வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இது தொடர்பாக கடந்தாண்டு ஜூன் மாதம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதுவரை போலி பேஸ்புக் கணக்கு செயல்பாட்டில் உள்ளது. அதில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரு வருடமாக போலீசார் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்சல் கான் கூறுகையில், கடந்தாண்டு புகார் அளித்தோம். புகார் அளித்த 3 மாதத்தில் விசாரணை இன்றி எங்களுக்கு தெரியாமல் புகார் மீது நடவடிக்கை எடுத்ததாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை போலி பேஸ்புக் கணக்கு செயல்பாட்டில் இருக்கிறது. அதில் அவதூறு பரப்பி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.