திண்டுக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் துவக்கி வைத்தார்

திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை, மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல் விற்பனையை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 87 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும், பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன. தற்போது உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளன. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோயம்புத்துார் மென்பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. மேலும் பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்/பருத்தி சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.com என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.42.15 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டு 2022-23-ல் விற்பனை குறியீடாக ரூ.72 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்தார்.

இந்த விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் சு.அண்ணாத்துரை, முதுநிலை மண்டல மேலாளர் மு.சங்கர், மேலாளர்(பொறுப்பு) மு.சங்கீதா, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2