திண்டுக்கல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு – போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வத்தக்கவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு என்ற முருகேசன்(52). விவசாயியான இவர் பழனி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மனைவி வளர்மதி(45). இவர்களுக்கு சிவரஞ்சனி(21) என்ற மகளும், கார்த்திகேயன்(18) என்ற மகனும் உள்ளனர். இருவரும் கல்லூரு படிப்பை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை முருகேசன் வீட்டு அருகே உள்ள வைக்கோல் போர் மற்றும் மக்காச்சோள தட்டை போர் தீ பிடித்து எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உரிமையாளர் முருகேசனை கைப்பேசி மூலம் தொடர்வு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் இதுபற்றி பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மக்காச்சோள தட்டை போருக்குள் முருகேசன், அவரது மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகிய 4 பேரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி தீயணைப்பு துறையினர் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு தென்மண்டல ஐ.ஜி அன்பு, திண்டுக்கல் சரக டிஐ.ஜி விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் முருகேசன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது தெரியவந்தது. இதனால் யாராவது 4 பேரையும் அடித்து கொன்று, பின்னர் அவர்களது உடல்களை வைக்கோல் போருக்குள் போட்டு தீ வைத்து எரித்து இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதேசமயம் முருகேசனை தவிர மற்ற 3 பேரின் உடல்களும் முழுமையாக எரிந்திருக்கும் நிலையில், முருகேசன் உடல் மட்டும் பாதி எரிந்துள்ளதால், அவர் மனைவி, மகன், மகளை வைக்கோல் போரில் தள்ளி கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்கேமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

முருகேசனுக்கு கடன் பிரச்சனை இல்லாத நிலையில், நடந்திருக்கும் இச்சம்பவம் தற்கொலையா? அல்லது இவர்களை யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ரூபி உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.