திண்டுக்கல் மாவட்டம் அகரம் கிராமம், உலகம்பட்டி அருகில் மாங்கரை ஆற்றின் குறுக்கே ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைத்து மாயாண்டி குளத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நீர்வளத்தை மேம்படுத்துவதற்காக நீர்வளத்துறை அமைத்துள்ளார். வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கையை இந்த ஆண்டு முதல் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தேர்தல் நேரத்தில் தாம் அறிவித்த வாக்குறுதிகளையும், தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடைகோடி கிராமங்களான உலகம்பட்டி, அச்சாம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்குத் தேவையான நீராதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உலகம்பட்டி அருகில் மாங்கரை ஆற்றின் குறுக்கே ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. மழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் அமைந்துள்ள ஆடலூர் மலை, தோனி மலை, பாரி மலை ஆகிய மலைகளில் இருந்து மாங்கரையாறு உற்பத்தியாகி கோடல்வாவி கிராமம், மாங்கரை கிராமம், முத்தனம்பட்டி கிராமம், சில்வார்பட்டி கிராமம், அகரம் கிராமங்கள் வழியாக சுமார் 31.50கி.மீ தூரம் பயணித்து குடகனாற்றில் கலக்கின்றது. மாங்கரையாற்றின் 29 கி.மீ தூரத்தில் அகரம் கிராமம், உலகம்பட்டி அருகில் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த அணைக்கட்டு 90 மீட்டர் நீளத்தில், 2.56 மீட்டர் உயரத்தில், 0.107 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ளதாக வடிவமைக்கப்படவுள்ளது.
அணைக்கட்டின் வெள்ள நீர் வெளியேற்றும் திறன் 35,607 க.அடி/வினாடி ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாயாண்டி குளத்திற்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும், உலகம்பட்டி கிராமத்தில் 96.32 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அணைக்கட்டை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அங்குள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்து, விவசாய தேவைகள் மேம்பாடு அடையும். மேலும், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். விவசாயிகளின் நலனுக்காக வருங்காலங்களில் இன்னும் ஏராளமான திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.