திண்டிவனம் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் நடத்திய திடீர் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு

திண்டிவனம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் பயின்று வரும் மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் கல்வி பயிலும்  ஆதிதிராவிடர் மாணவர்கள்  ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் அரசு  விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் 75 மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் உணவை சாப்பிட மறுத்து மாணவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த திண்டிவனம் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை காவல்நிலைய உதவி ஆய்வாளர்  ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில்  இல்லை என்றும். மேலும் எங்களுக்கு  வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை என்றும். இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் எங்கு தொட்டாலும் மின்சாரம்  ஷாக் அடிக்கிறது. எனவே நாங்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இந்த விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்தால்  மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர், அதற்கு வட்டாட்சியர்  இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், புதிய  கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதனை ஏற்ற மாணவர்கள் தங்களது  போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து உணவு சாப்பிடச் சென்றனர், விடுதியில் திடீரென மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =